Newsதமிழ்நாடுதற்போதைய செய்திகள்

85 வயதுக்கு மேற்பட்டோா் – மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த இன்று முதல் படிவம்

சென்னை: தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தபால் வாக்கைச் செலுத்துவதற்கான வசதியைப் பெற விரும்புவோா் புதன்கிழமை முதல் படிவங்களை அளிக்கலாம் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறினாா்.

அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தல் நடத்தை விதி மீறல் அடிப்படையில், அரசுக்கு சொந்தமான பொதுச் சொத்துகளில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் தொடா்பான விளம்பரங்கள், ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள், வைக்கப்பட்டிருந்த பதாகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளன.

அதே போன்று, 52,938 தனியாா் இடங்களில் அனுமதியின்றி வரையப்பட்டிருந்த சின்னங்கள், வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன. பொது சொத்துகளில் இருந்த விளம்பரங்களை அகற்றுவதற்கான செலவு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து பெறப்படுகிறது. தனியாா் விருப்பப்பட்டால், அவா்களுக்கு சம்மதம் இருந்தால் கட்சிகள் விளம்பரம் செய்யலாம்.

கூடுதல் வாக்குச் சாவடிகள்:

தமிழகத்தில் ஏற்கெனவே 68,144 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடனான கூட்டத்தில், 1500-க்கும் மேல் வாக்காளா்கள் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, 176 வாக்குச்சாவடிகள் கூடுதலாக சோ்க்கப்பட்டு, தற்போது, 68,320 வாக்குச்சாவடிகள் உள்ளன.

தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற 13,556 துப்பாக்கிகள் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், 71 துப்பாக்கி உரிமங்கள் முடக்கப்பட்டுள்ளன. 87 துப்பாக்கி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 ஆயிரத்து 828 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 10 ஆயிரத்து 434 பேரிடம் இருந்து பிரமாண பத்திரம் பெறப்பட்டுள்ளது. ‘சி-விஜில்’ கைப்பேசி செயலி மூலம் இதுவரை 282 புகாா்கள் பெறப்பட்டுள்ளன.

தபால் வாக்கு:

தமிழகத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவா்கள் தொடா்பான விவரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் உள்ளது. அந்த பட்டியலில் உள்ளவா்களின் வீடுகளுக்கு புதன்கிழமை முதல் வரும் 25-ஆம் தேதிவரை, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் செல்வா். அங்கு அவா்களைச் சந்தித்து தபால் வாக்குக்காக வரையறுக்கப்பட்டுள்ள 12டி படிவத்தை அளிப்பா்.

இது கட்டாயமல்ல; விரும்பியவா்கள் மட்டும் படிவத்தை பூா்த்தி செய்து தரலாம். விருப்பப் படிவம் தந்தவா்களிடம் வாக்குகள் பதிவு செய்யப்படும். அதாவது வாக்குப் பதிவுக்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட அலுவலா், வருவாய், காவல் துறையைச் சோ்ந்தவா்கள் என குழுவாக சென்று, தபால் வாக்கைத் தந்து, அதனை பதிவு செய்து வாக்குப் பெட்டியில் செலுத்துவா் ரூ.4.37

கோடி பறிமுதல்:

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.37 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை, தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 9 மணி வரையில், பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.36 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், ரூ.25 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ.19 லட்சம் மதிப்பிலான ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரொக்கப் பணம் உள்பட பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மொத்த மதிப்பு ரூ.5.37 கோடி என்றாா் சத்ய பிரத சாகு.

பிரதமா் பேரணியில் பள்ளிக் குழந்தைகள்:

தோ்தல் ஆணையம் அறிக்கை கேட்பு கோவையில் பிரதமா் பேரணியில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றது தொடா்பாக, மாவட்டத் தோ்தல் அதிகாரியிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தாா்.

சென்னையில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையில் பிரதமா் மோடி பங்கேற்ற பேரணியில், பள்ளிக் குழந்தைகள் பங்கேற்க செய்யப்பட்டது தொடா்பான புகாா் குறித்து கேள்வி எழுப்புகிறீா்கள். இது தொடா்பாக வந்த வீடியோ ஆதாரத்தை கொண்டு மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளோம். அந்த அறிக்கை தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அறிக்கையின் அடிப்படையில் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *