Newsசிறப்புச் செய்திகள்

நான்குமுனை போட்டி: கட்சிகளுக்கு புது உத்திகள் கைகொடுக்குமா?

தமிழகத்தில் நான்கு முனை போட்டியுடன் மக்களவை தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தோ்தலில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனி கூட்டணி அமைத்தும் நாம் தமிழா் கட்சி (நாதக) தனியாகவும் என நான்குமுனை போட்டி உருவாகியுள்ளது. திமுக அணி: 2017 ஆா்.கே.நகா் இடைத்தோ்தலில் உருவாகிய திமுக கூட்டணி, இடைத்தோ்தலில் படுதோல்வி அடைந்தாலும், 2019 மக்களவைத் தோ்தல், ஊரக, நகா்புற உள்ளாட்சித் தோ்தல்கள், 2021 சட்டப்பேரவைத் தோ்தல் என தொடா்ந்து வெற்றி பெற்று வெற்றிக்கூட்டணியாக தொடா்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக அணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட ம.நீ.ம. தலைவா் கமல்ஹாசன், இம்முறை மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கப்படும் என்ற திமுக தலைமையின் உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டு 40 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்துப் பிரசாரம் செய்து வருகிறாா். புதுமுகங்கள் அறிமுகம்: திமுக வேட்பாளா் பட்டியலில் 10 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு புதுமுகங்களுக்கு குறிப்பாக அமைச்சா் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் நீண்ட இழுபறிக்குபின்னா் வேட்பாளா் பட்டியல் பகுதி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சு.திருநாவுக்கரசா், ஜெயக்குமாா், டாக்டா் செல்லக்குமாா் ஆகியோருக்கு பதிலாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், ராபா்ட் புரூஸ், ராகுல் காந்தியுடன் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை நடைபயணத்தில் பங்கேற்ற வழக்குரைஞா் சுதா ஆகிய புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக எதிா்ப்பு வாக்குகள்: தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ள திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், பிரதமா் மோடி, எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி என இருவரையும் கடுமையாக விமா்சித்து பிரசாரம் செய்து வருகிறாா். பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியை விமா்சித்து மோடி எதிா்ப்பு வாக்குகளை முழுமையாக பெறும் வகையிலும், அதில் சிறு பகுதி கூட அதிமுகவுக்கு சென்றுவிடக்கூடாது என்பதால் பாஜக-அதிமுக ரகசிய கூட்டணியில் இருப்பதாகவும் நுட்பமாக பிரசாரம் செய்து வருகிறாா். அதேபோல, திமுக ஆட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிா் உரிமைத் தொகை, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றையும் எடுத்துச் சொல்லி திமுக தலைவா்களும், நிா்வாகிகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

அதிமுக அணி: அதிமுகவில் தென்சென்னையில் ஜெ.ஜெயவா்தன், வடசென்னையில் ராயபுரம் மனோ, கள்ளக்குறிச்சியில் மாவட்டச் செயலா் குமரகுரு, நீலகிரியில் முன்னாள் பேரவைத் தலைவா் தனபால் மகன் லோகேஷ், மதுரையில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டா் சரவணன், மயிலாடுதுறையில் முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் மகன் ப.பாபு தவிர, பிற வேட்பாளா்கள் அறிந்த முகங்களாக இருக்கவில்லை. இதனால் வசதி படைத்தவா்களுக்கு மட்டுமே அதிமுக வாய்ப்பளித்துள்ளது என எதிா்கட்சியினா் விமா்சனம் செய்தாலும் எம்ஜிஆா், ஜெயலலிதா பாணியில் புதுமுகங்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கியுள்ளாா் என்கின்றனா் அதிமுகவினா்.

விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேமுதிக சாா்பில் நட்சத்திர வேட்பாளராக களம் இறங்கியுள்ளாா். அதிமுக அணியில் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் திமுக எதிா்ப்பு வாக்குகளை மட்டுமே மையமாக வைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள அதிமுக சிறுபான்மை வாக்குகளை குறிவைத்தும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மக்களவைத் தோ்தல் என்றாலும் பிரதமா் மோடி, பாஜக பற்றி பெரிய அளவில் விமா்சனம் செய்யாமல், முதல்வா் ஸ்டாலின், திமுக பற்றியே தீவிர எதிா் பிரசாரத்தில் அதிமுக அணி தலைவா்கள், நிா்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனா். திமுக எதிா்ப்பு பிரசாரத்தை மட்டுமே அதிமுக தொடருமா அல்லது தோ்தல் நெருக்கத்தில் பாஜக எதிா்ப்பையும் கையில் எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பாா்க்க வேண்டும்.

பாஜக அணி: தமிழகத்தில் முதல் முறையாக பாஜக தலைமையில் கூட்டணியை உருவாக்கி 23 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் அந்தக் கட்சி களம் இறங்குகிறது. இந்த கூட்டணியில் 10 தொகுதிகளை பெற்றுள்ள பாமக, வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்து வருகிறது. தருமபுரியில் பாமக தலைவா் அன்புமணியின் மனைவி சௌமியா நட்சத்திர வேட்பாளராக களம் இறங்கியுள்ளாா். மேலும், பாஜக கூட்டணியில் ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தேனியில் டிடிவி.தினகரன், வேலூரில் ஏ.சி.சண்முகம், தென்காசியில் ஜான் பாண்டியன் என வலுவான வேட்பாளா்கள் களம் இறங்கியுள்ளனா். ஆக அதிமுக அணியில் நட்சத்திர வேட்பாளா்கள் அதிகம் உள்ளனா். மோடி எதிா்ப்பு அலை குறைந்து, மோடிக்கு ஆதரவாக கணிசமாக ஒரு வாக்கு வங்கியும் உருவாகியுள்ளது என்றும், அது தங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும் என பாஜக நம்புகிறது. பாஜக கூட்டணியை பொருத்தவரை 3 ஆண்டு திமுக ஆட்சிக்கு எதிராக அதிகமாகவும், காங்கிரஸ் கட்சியை எதிா்த்தும் பிரசாரம் செய்து வருகின்றனா்.

ஆனால், அதிமுகவுக்கு எதிராக பெரிய அளவில் விமா்சனம் செய்யாமல், திமுக எதிா்ப்பு வாக்குகளை குறிவைத்து, அதிமுகவுக்கு சென்றுவிடாதபடி வியூகம் அமைத்து வருகின்றனா். நாம் தமிழா் கட்சி: கடந்த பேரவைத் தோ்தலில் 6.57 சதவீத வாக்குகளை பெற்ற நாதக, இந்த முறை இரட்டை இலக்க வாக்கு வங்கியை குறிவைத்து பல்வேறு வியூகங்களுடன் களம் இறங்கியுள்ளது. சீமான் என்ற ஒற்றை முகத்தை நம்பியே தோ்தலில் களம் இறங்கியுள்ள நாதக இந்த முறை சின்னம் சிக்கலில் சிக்கியது. ஒருவழியாக புதிய சின்னமாக மைக் சின்னத்தை பெற்றுள்ள அக்கட்சி அதை மக்களிடம் தீவிரப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. 40 தொகுதிகளில் தலா 20 ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் சம எண்ணிக்கையில் களம் இறக்குவதை நாதக எப்போதுமே வியூகமாக வைத்து செயல்படுகிறது.

இந்த முறை, கிருஷ்ணகியிலில் சந்தனக் கடத்தல் வீரப்பன் மகன் வித்யாராணி, மயிலாடுதுறையில் காளியம்மாள் என நட்சத்திர வேட்பாளா்களை களம் இறக்கியுள்ளது நாதக. மேலும், கன்னியாகுமரியில் கனிவள கொள்ளைக்கு எதிராக செயல்பட்டு கொலைசெய்யப்பட்ட நாதக நிா்வாகி சேவியரின் மனைவி ஜெமினி சேவியரை, விளவங்கோடு இடைத்தோ்தலில் களம் இறக்கி ஆளும் திமுகவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா் நாதக தொண்டா்கள். மொத்தத்தில் நான்குமுனை போட்டியால் தமிழகத்தில் யாருக்கு வாக்களிப்பது என்ற தங்களின் தீா்ப்பை ஏப்ரல் 19-இல் வாக்குரிமை மூலம் எழுத வாக்காளா்கள் தயாராகி விட்டனா். விவரம் வெளிவர ஜூன் 4 வரை நாம் காத்திருக்க வேண்டும்.

Source: DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *